கங்குலி 'என்ட்ரி' சலசலப்பு... மார்ச் 7-ல் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா?

கங்குலி 'என்ட்ரி' சலசலப்பு... மார்ச் 7-ல் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா?
கங்குலி 'என்ட்ரி' சலசலப்பு... மார்ச் 7-ல் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா?

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை தங்கள் கட்சி சார்பில் களமிறக்க பாஜக முயன்று வருவதாக பல மாதங்களாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கங்குலியை அரசியலில் இறக்கி, மேற்கு வங்க தேர்தல் களத்தை மம்தா Vs கங்குலி என மாற்ற பாஜக திட்டமிட்டு வருவதாகவும், அதற்காக கங்குலிக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அதற்கேற்ப, சமீபத்தில் சில சம்பவங்களும் நடந்தன.

அமித் ஷா மற்றும் அவரது அமைச்சரவை சகா அனுராக் தாக்கூர் ஆகியோரின் ஆதரவோடு 2019 அக்டோபரில் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ தலைவரானார். கங்குலியுடன், மேலும் இரண்டு நபர்கள் முக்கிய பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிசிசிஐ செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ பொருளாளராக அனுராக் தாக்கரின் சகோதரர் அருண் துமல் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

இந்தச் சம்பவம் நடந்தபோதே கங்குலி பாஜகவில் சேர இருக்கிறார் என்ற விவாதம் எழுந்தது. ஆனால் அப்போது அமித் ஷா, ``பாஜக கங்குலியை இழுக்க முயற்சிக்கவில்லை. ஆனால், அவர் பாஜகவில் சேர்ந்தால் நல்லது" என்று மட்டும் விளக்கம் கொடுத்தார். ஆனால் கங்குலி தரப்பில் அரசியல் என்ட்ரி குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

கங்குலி அரசியலில் நுழைவாரா, பாஜகவில் சேருவாரா என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏனென்றால். இப்போது வரை, அரசியலில் நுழைய தனக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று சவுரவ் கங்குலி மறுத்தே வருகிறார்.

ஆனால், பாஜக தரப்பில் இருந்து அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. அதற்கேற்ப, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் டிசம்பர் 27 அன்று கங்குலியை நேரில் வரவழைத்து அவரிடம், பேச்சுவார்த்தை நடத்தினார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் பரபரப்பு, கங்குலி நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் மாறிவிட்டது.

ஆனால், தற்போது கங்குலி அரசியல் என்ட்ரி குறித்து மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அதாவது, வரும் 7-ம் தேதி கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில், மோடியுடன் சவுரவ் கங்குலியும் கலந்து கொள்வார் என்றும், அன்றே மோடி முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொள்ள இருக்கிறார் என்றும் மேற்கு வங்க மற்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``அவர் அங்கு இருப்பாரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது அவர் மட்டும்தான். சவுரவ் வீட்டில் ஓய்வில் இருப்பதை நாங்கள் அறிவோம். அவர் கட்சியில் இணைவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது, கூட்டத்தில் இதுதொடர்பாகவும் பேசப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் கலந்து கொள்வது அவருடைய விருப்பம். உடல்நிலை, காலநிலை இரண்டும் ஒத்துவந்து கங்குலியும் கலந்துகொள்ள முன்வந்தால் அவரை மனதார வரவேற்கிறோம். ஆனால் அனைத்தையும் அவர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

ஆனால், இந்த விவகாரத்தில் கங்குலி தரப்பில் இருந்து எந்த வார்த்தையும் இல்லை. எனினும் திடீரென்று கிளம்பியுள்ள இந்த தகவலால் மேற்கு வங்க அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com