8 போலீசார் சுட்டுக்கொலை: உபியை பரபரப்பாக்கிய ரவுடி விகாஷ் துபேவின் அதிர வைக்கும் பின்னணி!
உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த சம்பவம் நடந்தது எப்படி? யாரை கைது செய்ய இந்த போலீஸ் படை சென்றது என தகவல் வெளியாகியுள்ளது.
2001ம் ஆண்டு காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே பாஜகவின் முக்கிய பிரமுகரான அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்றது ஒரு கும்பல். அந்தக் கொலையின் முக்கிய குற்றவாளி விகாஷ் துபே. 1993ம் ஆண்டு வழிப்பறி செய்து தன்னுடைய குற்றக்கணக்கை தொடங்கியுள்ளார் ரவுடி விகாஷ் துபே. அடுத்தடுத்து கொலைகள், கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என விகாஷ் துபே மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளில் விகாஷ் துபே முக்கிய குற்றவாளி.
(விகாஷ் துபே - பழைய புகைப்படம்)
இப்படி பல குற்றநடவடிக்கைகளின் முக்கிய குற்றவாளியான விகாஷ் கான்பூரின் டிக்ரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு போலீசார் அப்பகுதிக்குச் சென்றுள்ளன. ஆனால் போலீசார் வருவதை முன்பே தெரிந்துகொண்ட விகாஷ் போலீசார் வரும் பாதையில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து சாலையை மறைத்து வைத்துள்ளார். வழி மறைக்கப்பட்டதைக் கண்ட காவலர்கள் அனைவரும் தங்களது வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்த விகாஷின் ஆட்கள் சரமாரியாக சுட்டுள்ளனர்.
(விகாஷ் துபே - தற்போதைய புகைப்படம்)
திடீர் துப்பாக்கிச் சூட்டை எதிர்பாராத போலீசாரால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இதில் 8 போலீசார் உயிரிழந்தனர். விகாஷ் துபே தன்னைச் சுற்றி இளம் ரவுடிகளால் ஆன ஒரு படையையே வைத்திருந்து இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கான்பூரைச் சுற்றி 6 மாவட்டங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டின் வந்துள்ளன.
இந்த மாவட்டங்களை விட்டு யாரும் வெளியே செல்லமுடியாதவாறு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்களின் வீர மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ரவுடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.