\
’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்!

’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்!

’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்!
Published on

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கச் சென்றதால், அவருக்கு கிராமத்து பஞ்சாயத்தில் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவர் கடந்த 4 ஆம் தேதி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான சந்தீப், கிஷோர் ஆகியோரைப் பார்த்தார். அவர்கள் அவருக்கு உதவுவதாகக் கூறி, ’கட்டிட வேலை இருக்கிறது, வந்தால் சம்பளம் கிடைக்கும். நாளைக்கு வா’ என்று அழைத்தனர். அதை நம்பி, மறுநாள் அந்தப் பெண், சென்றார். அப்போதுதான் தன்னை அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

ஆனால், அந்தப் பெண் வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னார். அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்ததை விவரித்தார். போலீசார் புகாராக எழுதி தரக் கூறியதாகவும் அதனால் தயங்கிய அந்தப் பெண், ஊர்க்காரர்களிடம் விசாரித்துவிட்டு வருவதாகவும் கூறி வீட்டுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

பிறகு சில நாட்கள் கழித்து, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஊருக்குள் பரவியது. இதையடுத்து கூடிய பஞ்சாயத்து, பாலியல் வன்கொடுமை செய்த சந்தீப், கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. 
பின்னர் இந்த விஷயத்தை ஊர் பஞ்சாயத்தை மதிக்காமல் போலீசுக்கு சென்றதால், ஊருக்கு அவமரியாதையை, அந்த இளம் பெண் ஏற்படுத்தி விட்டார், அதனால் அவரும் குற்றவாளிதான் என்று கூறி, அவருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி புகார் ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார், பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com