பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்யும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்!

பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்யும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்!
பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்யும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்!

ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தில் அனைத்து பணிகளிலும் பெண்கள் மட்டுமே நியமிக்கபட்டுள்ளனர்.

ஜெய்ப்பூரில் முக்கிய வழித்தடமாக இருப்பது காந்தி நகர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு அனைத்து பணிகளிலும் பெண்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதன் மூலம் இந்தியாவிலேயே பெண்கள் மட்டுமே அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் முக்கிய வழித்தடம் கொண்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை காந்தி நகர் பெற்றுள்ளது. அதன்படி இங்கு கண்காணிப்பாளர் முதல் துப்புரவு பணியாளர் வரை அனைத்து பணிகளிலும் பெண்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 7,000 பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் 25 ரயில்கள் நிற்கின்றன. அத்துடன் 50 ரயில் வந்து செல்கின்றன. இத்தகைய பரபரப்பான ரயில் நிலையத்தை பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்வது, பெருமையாக உள்ளதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர். அத்துடன் இந்தப் பெருமை வடமேற்கு ரயில்வே மண்டலத்தின் பொது மேலாளர் டி.பி. சிங் அவர்களையே சேரும் என்றும் புகழ்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக காந்தி நகர் ரயில் நிலையத்தில் நேற்று விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் பேசிய டி.பி. சிங், “தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதித்து வருகின்றனர். இந்தியாவிலேயே பெண்கள் மட்டும் நிர்வாகம் செய்யும் முதல் ரயில் நிலையம் இது தான் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். பெண் ஊழியர்கள் திறமையுடன் செயல்பட்டு பயணிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்னதாக மும்பையில் உள்ள மாதுங்கா ரயில் நிலையத்திலும் பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர். ஆனால் அது முக்கிய வழித்தடம் அல்ல. புறநகர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் துணை வழித்தடம் தான்” என்று கூறினார். 

இந்த நிகழ்ச்சியின் இடையே காந்தி நகர் ரயில் நிலையத்தில், மேடை அனுமதிச்சீட்டு இன்றி நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம், அபூர்வா மற்றும் வந்தனா என்ற கண்காணிப்பு அதிகாரிகள் ரூ.260 அபராதம் வசூலித்தனர். இதுதொடர்பாக கூறிய வந்தனா, விதிமீறல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் பணியை செம்மையாக செய்வோம் என்றும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com