“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுதான்” - இறுதிவரை உறுதியாக இருந்த காந்தி

“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுதான்” - இறுதிவரை உறுதியாக இருந்த காந்தி
“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுதான்” - இறுதிவரை உறுதியாக இருந்த காந்தி

தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்த காந்தியடிகள், தாய்நாடு திரும்பிய பிறகு முற்றிலும் எளிமையான மனிதராக மாறினார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை தீவிரமாக எதிர்த்தார். அவரது பிறந்தநாளான இன்று, தேசப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக எட்டு ஆண்டுகாலம் தீவிரமாகப் போராடிய மகாத்மா காந்தியடிகள், 21 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்ததன் மூலம் மக்கள் தொண்டராகவும், தலைவராகவும் உருவெடுத்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகண்ட நிம்மதியுடன், 1915 ஜனவரி 9ஆம் தேதி மும்பை திரும்பினார் காந்தியடிகள். 

அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர் மக்கள். அப்போது முற்றிலுமாக மாறியிருந்தது காந்தியின் தோற்றமும் உடையும். தழையத் தழையத் கட்டிய வேட்டி, உடம்பில் ஒட்டாத ஜிப்பா, தலையில் முண்டாசு என விவசாயி உடையில் காட்சியளித்தார். காந்தியும், கஸ்தூரி பாயும் ஒரு காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். 

அகிம்சை வழியில் அனைத்திற்கும் தீர்வு காணலாம் என்பதில் உறுதியாக இருந்த அவர், விடுதலைப் போரின்போது 17 முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். சத்தியம், அகிம்சை ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா - பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. இதனை சிறிதும் விரும்பவில்லை காந்தி. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்தி பிரிவினையைத் தடுக்க முயன்றார். ஆனாலும், பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று வாதிட்டனர் மத அடிப்படைவாதிகள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுதான் என்பதில் உறுதியாக இருந்தார் மகாத்மா.

பிரார்த்தனைக் கூட்டங்களிலும், மக்கள் சந்திப்புகளிலும் "மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டையாடக் கூடாது" என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார். கொல்கத்தாவில் கலவரம் எல்லை மீறிச் சென்றதைப் அறிந்த காந்தியடிகள், நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண முற்பட்டார்.

அப்போது இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் பிரபு உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தைகள் மறக்க முடியாதவை. "ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கொல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதனாக காந்தி என்ற அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியிருக்கிறார். இது ஒரு அற்புதமான செயல்" எனப் புகழ்ந்தார். காந்தியைப் பொறுத்தவரை, இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு, அதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com