உயிரிழந்தது குருவாயூர் பத்மநாபன் யானை.. கண்ணீர் அஞ்சலி செலுத்தும் மக்கள் !

உயிரிழந்தது குருவாயூர் பத்மநாபன் யானை.. கண்ணீர் அஞ்சலி செலுத்தும் மக்கள் !
உயிரிழந்தது குருவாயூர் பத்மநாபன் யானை.. கண்ணீர் அஞ்சலி செலுத்தும் மக்கள் !

கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணன் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது. குருவாயூர் கோயில் என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது யானைகள்தான். குருவாயூர் கோயிலால் நிறைய யானைகள் பராமரிக்கப்பட்டாலும் உற்சவம் போன்ற பணிகளுக்கு ஒரே யானை பயன்படுத்தப்படும். அந்த யானைக்கு கஜரத்தினம் என்ற பட்டமும் சூட்டப்படும்.

அப்படிப்பட்ட பணியில் 66 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த பத்மநாபன் என்ற யானை நேற்று உடல்நலக் குறைவினால், 84 வயதில் உயிரிழந்தது. திருச்சூர் பூரம் திருவிழா, மாதந்தோறும் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், விசேஷங்களில் இந்த யானைதான் குருவாயூரப்பனின் சிலையை சுமந்து செல்லும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த யானை நோய்வாய்ப்பட்டிருந்தது. உடலில் வீக்கம் இருந்ததால் மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு யானை உயிரிழந்தது என்று குருவாயூர் தேவஸ்வம் போர்டு அறிவித்தது. இந்தச் செய்தியை கேட்டு குருவாயூர் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதியில் இருக்கும் ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க பத்மநாபனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1954 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த சகோதர்களால் அன்பளிப்பாக குருவாயூர் கோயிலுக்கு இந்த யானை கொடுக்கப்பட்டது.

கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அதிக கட்டணமாக ரூ.2.25 லட்சம் வரையில் பெறப்பட்ட யானைதான் பத்மநாபன். மேலும், தன்னுடைய அமைதியான கீழ்படிதல் தன்மை மற்றும் நீண்ட தும்பிக்கை, கூர்மையான தந்தம் போன்றவற்றால் பக்தர்களால் பெரிதும் விரும்பபட்டது பத்மநாபன். அதேபோல திருவிழாக்களின்போது இதுவரை எந்த அசம்பாவித சம்பங்களையும் பத்மநாபன் உருவாகக்கியதில்லை தனிச்சிறப்பு.

தரையில் தொடும் அளவுக்கு நீண்ட தும்பிக்கை, அகலமான தலை உள்ளிட்டவற்றை கொண்டதால் "கஜரத்னம்" என்ற பட்டத்தை பெற்றது பத்மநாபன். பத்மநாபன் இப்போது மறைந்துள்ளதால் குருவாயூர் கோயில் நிர்வகிக்கும் யானைகளின் எண்ணிக்கை 47 ஆக குறைந்துள்ளது. பத்மநாபனுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் பிரசித்திப்பெற்ற "கஜராஜன்" கேசவன் என்ற யானை 1976 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி இறந்தது. அந்த யானைக்கு கோயில் நிர்வாகம் சிலையும் வைத்துள்ளது. இப்போது வரை ஆண்டுதோறும் கேசவன் யானை இறந்த தினம் குருவாயூர் மக்களால் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com