தமிழகத்தைப் புரட்டிப் போட்டு தாண்டவமாடிய ‘கஜா’ புயல் தற்போது கேரளாவுக்குள் நுழைந்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்ட ‘கஜா’ புயல், கடலூர்- பாம்பன் இடையே நேற்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து ‘கஜா’ புயல் எப்போது கரையைக் கடக்கும் என ஏக எதிர்பார்ப்புக்கும், அச்சத்துக்கும் மத்தியில், நள்ளிரவு 12 மணியளவில் நாகை, வேதாரண்யம் இடையே அது கரையைக் கடந்தது.
புயலின் முன்பகுதி கரையை தொடங்கிய அந்த நேரத்தில் நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால், வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் ‘கஜா’ புயலின் கண்பகுதியில் முதல் பகுதி கரையைக் கடந்தது. அதன்பின்னர் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் எனப் பெரும்பால பகுதிகளில் சூறைக்காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதேபோல் மின்கம்பங்களும் புயல் காற்றினால் சேதமடைந்தன. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே சூறைக்காற்று, கனமழையால் பாதிப்பு ஏற்பட்டது. ‘கஜா’ புயலால் தமிழகம் முழுவதும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து மணிக்கு 23 கி.மீ வேகத்தில் ‘கஜா’ புயல் நகர்ந்து சென்று திண்டுக்கல் அருகே மையம் கொண்டது. இதனால் திண்டுக்கல், கரூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. ‘கஜா’ புயல் பகல் 12 மணியளவில் வலு குறைந்து தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில் ‘கஜா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறைந்ததையடுத்து மதியம் 3 மணியளவில் கேரளாவுக்குள் ‘கஜா’ புயல் நுழைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.