Gaganyaan mission|விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம்.. பாராசூட் சோதனை வெற்றி!
ககன்யான் திட்டத்தின் முக்கிய பரிசோதனையாக, இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் பாராசூட் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த சோதனை, விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைக்கும் முக்கிய கட்டமாகும். இஸ்ரோ, இந்திய விமானப்படை, டி.ஆர்.டி.ஓ. ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு பாராசூட்டை அனுப்பியது.. இது ககன்யான் திட்டத்தின் போது விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாகத் திரும்ப பூமிக்கு அழைத்துவரும் பாராசூட் ஆகும்.. இந்த பாராசூட் குறித்த பயிற்சியில் இஸ்ரோ வெற்றி பெற்றது.. ககன்யான் திட்டத்தில் இது மிக முக்கியமான கட்டமாக சொல்லப்படுகிறது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியதாவது, "ககன்யான் பணிகளுக்கான பாராசூட் அடிப்படையிலான வேகக் குறைப்பு அமைப்பின் முழுமையான செயல் விளக்கத்திற்காக இஸ்ரோ IADT-01 ஐ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த சோதனை இஸ்ரோ, IAF, DRDO , இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நடத்தியது” என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து கடந்த வாரத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பேசுகையில், ககன்யானுக்கான முக்கிய ஆயத்தப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் "ககன்யான்" திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, முதல் மனித விண்வெளிப் பயணம் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ளது “ என்று தெரிவித்தார்..
ககன்யான் விண்கலத்தில் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஏராளமான பரிசோதனைகளை இஸ்ரோ தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அதன்படி, ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி - டி1, 2023 அக்டோபரில் ஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது..
விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது ககன்யான் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..