'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை

'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை

கடந்த வாரம் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் தற்போது பேசியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உள்ளது. இக்காரணங்களினால் உக்ரைனிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவிடமிருந்து கோதுமை வாங்குவதற்கு முன்வந்தன. அப்படி முன்வந்த நாடுகளினால், கடந்த ஏப்ரலில் அதிகபட்ச அளவுக்கு கோதுமை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் விளைவாக உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்தது.

இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வரும் அதீத வெப்பத்தினாலும் வரும் நாட்களில் உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பார்வையில் தடை அமல் செய்யப்பட்டது. இந்தியா விதித்த தடையின் காரணமாகவும், உக்ரைனில் நிலவும் போர் சூழலாலும் ஐரோப்பிய சந்தை திறக்கப்பட்டவுடன் கோதுமையின் விலை ஒரு டன்னுக்கு 435 யூரோக்கள் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோதுமை விலை உயர்வு குறித்து பேசியுள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட். நியூயார்க் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், "ஏற்றுமதிக்கு தடை வேண்டாம் என பல்வேறு நாடுகளிடம் நாங்கள் சொல்லி வருகிறோம். ஏனெனில் இத்தகைய தடை பல்வேறு நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என கருதுகிறோம். உணவு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியாவிடம் கோதுமை ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தெரிவிப்போம்.

அவர்கள் அதனை நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறோம். இந்தக் கூட்டத்தில் இது குறித்து மற்ற நாடுகள் எழுப்பும் குரலையும் அவர்கள் கேட்பார்கள் என நம்புகிறோம்" என சொல்லியுள்ளார். கோதுமை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com