
காரைக்காலில் வாரச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியொன்று இன்று நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த அருண் பிரசாத்தும் (மணமகன்), மதுநிகாவும் (மணமகள்) கடந்த ஒரு வருடமாக காதலித்துவந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்வதாக தெரிகிறது.
இன்று நடைபெற்ற இவர்களின் திருமணத்தில், இவர்களின் நண்பர்கள் தினசரி நாளிதழ் வடிவில் வரவேற்பு பேனர் அடித்து வைத்துள்ளனர். அதுதான் பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
அதில் ‘காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை செய்து வைக்கப்படுகிறது’ ‘கறிகஞ்சி கிடைக்காததால் கைகலப்பு’ ‘நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு’ என்றெல்லாம் பல பதிவுகள் உள்ளன.
மேலும் “மணப்பெண் தேவை” என கூறி நான்கு 2K கிட்ஸ் இளைஞர்கள் தங்களது புகைப்படம், வயது, படிப்பு, பதிவிட்டு “ஊதியம்: தேவையான அளவு. அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க! குறிப்பு பொண்ணா இருந்தா மட்டும் போதும்” என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர், சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. திருமண மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனரை வாகன ஓட்டிகள் நின்று படித்து ரசித்தவரே சென்றனர்.