பலியான யாத்ரீகர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களுக்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 1 ரூபாயும் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
மேலும், பனி லிங்க ஆலய நிர்வாகத்தின் சார்பிலும் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், தாக்குதலுக்கு பின்னர் சுமார் 11,000 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக தெரிவித்துள்ளது.