11 நாட்களுக்குப் பிறகு சோதனை செய்தால் எப்படி?: ஹத்ராஸ் விவகாரத்தில் கொதித்த டாக்டர்.!
ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகுதான் பாலியல் வன்கொடுமை ஆய்வுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி தடயவியல் சான்றுகளை சம்பவம் நடந்த 96 மணி நேரம் வரை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகின்றன என்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சிஎம்ஓ டாக்டர் அஸீம் மாலிக் கூறியுள்ளார்
செப்டம்பர் 14 ம் தேதி ஹத்ராஸை சேர்ந்த பட்டியலின தலித் பெண் நான்கு பேரால் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அலிகார் முஸ்லீம் மருத்துவமனையில் அவருக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி சுயநினைவு திரும்பிய பின்னர்தான் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின்னர் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அப்பெண்ணின் மாதிரிகள் அனுப்பப்பட்டன, செப்டம்பர் 25ஆம் தேதி, அதாவது சம்பவம் நடந்த 11 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட எஃப்எஸ்எல் அறிக்கையின் அடிப்படையில் தான் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தெரிவித்தார். “எஃப்எஸ்எல் (தடய அறிவியல் ஆய்வகம்) அறிக்கையின்படி, உள்ளுறுப்பு மாதிரியில் விந்து அல்லது விந்து சுரப்பு எதுவும் காணப்படவில்லை. தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் மரணத்திற்குக் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது” என அவர் தெரிவித்தார்.
“ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, ஆனால் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி தடயவியல் சான்றுகள் சம்பவம் நடந்த 96 மணி நேரம் வரை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகின்றன. எனவே இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடுமையை இந்த அறிக்கையால் உறுதிப்படுத்த முடியாது, ”என்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சி.எம்.ஓ டாக்டர் அஸீம் மாலிக் கூறியுள்ளார்
"11 நாட்களுக்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்களை எஃப்எஸ்எல் குழு எவ்வாறு கண்டுபிடிக்கும்? சம்பவம் நடந்த 2-3 நாட்களுக்குப் பிறகு விந்து உயிர்வாழாது. முடி, உடைகள், நகக்கணுக்கள் மற்றும் யோனி-குதம் ஆகியவற்றிலிருந்து மாதிரிகள் எடுத்தார்கள். ஆனால் சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் மாதவிடாய் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு கிடைக்கும் மாதிரிகளில் விந்து இருப்பதைக் காட்டாது” என்று அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 22 ம் தேதி, ஒரு மருத்துவர் அந்தப் பெண்ணிடம் மருத்துவ விசாரணையை நடத்தியதோடு, “உள்ளூர் பரிசோதனையின் அடிப்படையில், அப்பெண்ணிடம் பலத்தைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருப்பதாக நான் கருதுகிறேன்” என்று ஒரு “தற்காலிக கருத்தை” அளித்ததாக அறிக்கைகள் காட்டுகின்றன. அவர் வழங்கிய அறிக்கை விவரங்களின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர்கள் துப்பட்டாவால் அப்பெண்ணின் கழுத்தை நெரித்தார்கள் என்றும் அறிக்கை கூறியது. மேலும் இந்த கொடுமையை செய்தவர்கள் பெயர்கள் “சந்தீப், ராமு, லவ் குஷ், ரவி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.