ராஜஸ்தான் | புதிய ஆட்டோவிற்கு தீ வைப்பு... ஷோரூம் சேவையால் ஆத்திரமடைந்த ஓட்டுநரின் விபரீத முடிவு.!
ராஜஸ்தானில் உள்ள ஒரு பஜாஜ் ஷோரூமில் இந்த ஆட்டோ வாங்கப்பட்டுள்ளது. ஆட்டோ வாங்கிய சில நாட்களிலேயே வாகனத்தில் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் ஷோரூம் தரப்பில் முறையான தீர்வு காணப்படவில்லை. ஊழியர்களின் பதிலால் விரக்தியின் எல்லைக்குச் சென்ற அந்த ஓட்டுநர், தனது ஆட்டோவை நேராக அதே ஷோரூம் வாசலுக்குக் கொண்டு வந்தார். ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலேயே, தான் வாங்கிய அந்தப் புதிய ஆட்டோவிற்கு தீ வைத்தார்.
சிறிது நேரத்திலேயே வாகனம் முழுவதுமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்வாதாரத்திற்காக வாங்கிய வாகனத்தையே ஒருவர் தீயிட்டு எரிக்கும் நிலைக்குச் சென்றிருப்பது, வாடிக்கையாளர் சேவையில் உள்ள குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

