விரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்!
நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
மகாராஷ்டிராவின் சவான்வாடியைச் சேர்ந்தவர் அன்வர் ராஜ் குரு. அவர் தனக்கு பிடித்த பைக் ஒன்றை 2009ம் ஆண்டு வாங்கியுள்ளார். வாகன எண்ணை பதிவு செய்ததற்காக அவர் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆனால் அவர் கொடுத்த ஆவணங்கள் போலி எனக்கூறி அவர் மீதும், அவரது ஏஜெண்ட் மீதும் புகார் கொடுக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருவரும் இந்த ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன்பின்னர் ரூ.22 ஆயிரம் சாலை வரி செலுத்தி தனது பைக்கை ஷோ ரூமில் இருந்து வெளியே எடுத்த அன்வர், ஆட்டோ மூலம் நீதிமன்ற வளாகத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றார். பைக்கின் மீது பெட்ரோலை ஊற்றிய அவர் போக்குவரத்து நிறைந்த சாலையில் தீயிட்டு எரித்தார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் பைக்கை எரித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கை எரித்தது அன்வர் என தெரியவர அவர் கைது செய்யப்பட்டார்.
பைக் விவகாரத்தில் போலீசார் தன்னை அலைக்கழித்ததாகவும், அதனாலே பைக்கை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் அன்வர் தெரிவித்துள்ளார்