ஆர்வம் இல்லாத அரசியல் என்ட்ரீ.. நிதான அரசியல்.. முதலமைச்சராகும் உத்தவ் தாக்கரே..!

ஆர்வம் இல்லாத அரசியல் என்ட்ரீ.. நிதான அரசியல்.. முதலமைச்சராகும் உத்தவ் தாக்கரே..!

ஆர்வம் இல்லாத அரசியல் என்ட்ரீ.. நிதான அரசியல்.. முதலமைச்சராகும் உத்தவ் தாக்கரே..!
Published on

ஆர்வமே இல்லாமல் அரசியலுக்குள் நுழைந்த உத்தவ் தாக்கரே, தற்போது மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்க உள்ளார். வன உயிரின புகைப்படக் கலைஞரான உத்தவ் தாக்கரே, அரசியலுக்கு வந்த பாதையை தெரிந்துக்கொள்ளலாம்.

மகாராஷ்டிரா அரசியல் என்றாலே நினைவுக்கு வருவது பால் தாக்கரேவும், அவரது சிவசேனா கட்சியும்தான். மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கே என்ற முழக்கத்துடன் 1966-ஆம் ஆண்டு சிவசேனாவை தொடங்கினார் பால் தாக்கரே. மராட்டிய அரசியலில் தன்னிகரற்ற சக்தியாக வலம் வந்த பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக கருதப்பட்டவர், அவரது இளைய சகோதரர் மகன் ராஜ் தாக்கரே.

எனினும், திடீர் திருப்பமாக பால் தாக்கரேவின் இளைய மகனும் அரசியல் வாடையே அறியாதவருமான உத்தவ் தாக்கரே, 2003-ஆம் ஆண்டு சிவசேனாவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதற்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில், சிவசேனாவுக்கு வெற்றி தேடி தந்ததற்காக, இப்பரிசை வழங்கினார் தந்தை பால் தாக்கரே. 40 வயது வரை அரசியலில் எவ்வித ஆர்வமும் காட்டாத உத்தவ் தாக்கரேவின் விருப்பமே சிறந்த வனஉயிரின புகைப்படக்காரர் ஆவதுதான். தான் எடுத்த பல புகைப்படங்களைக் கொண்டு கண்காட்சியையும் நடத்தியுள்ளார் உத்தவ்.

2006-ல் கருத்து முரண்பாடுகளால் ராஜ் தாக்கரே கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், சிவசேனாவை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் உத்தவ். 2012-ஆம் ஆண்டு, பால் தாக்கரே மறைந்த நிலையில், அடுத்த ஆண்டே கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்றார் உத்தவ். இதைத்தொடர்ந்து வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்ட கட்சி என்ற சிவசேனா மீதான பிம்பத்தையும் உடைத்தார் உத்தவ். தந்தை பால் தாக்கரே மற்றும் சகோதரர் ராஜ் தாக்கரே போன்று தடலாடி அரசியலை விரும்பாத உத்தவ் தாக்கரே, அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கருத்தையும் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

2006-ஆம் ஆண்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவின் ஆசிரியராகவும் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பாஜகவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறிய உத்தவ் தாக்கரே, தனது பரம எதிரிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து, மகாராஷ்டிரா அரசியலில் புதிய அத்தியாத்தை தொடங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com