ரஃபேல், சபரிமலை உள்ளிட்ட 4 வழக்குகளில் இந்த வாரத்திற்குள் தீர்ப்பு?
அயோத்தியை தொடர்ந்து மேலும் 4 வழக்குகளில் உச்சநீதிமன்றம் இந்த வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதனால் உச்சநீதிமன்றம் நீண்ட காலமாக நடந்து வந்த அயோத்தி வழக்கை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
இதனை அடுத்து மேலும் 4 முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இந்த வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உள்ளது என தெரிய வந்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பின் மீது தொடரப்பட்ட சீராய்வு மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இது தவிர ‘செளக்கிதார் சோர் ஹை’ என அதாவது ‘காவலாளியே திருடன்’ என தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பு வெளியாக உள்ளது. மேலும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பில் மறு ஆய்வு கோரும் மனுக்களின் மீதும் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இதே போல உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வரும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவின் மீதும் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் அதற்கு முன்னதாக இத்தீர்ப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.