ஏப்ரல் 9 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் - ஒடிசா அரசு
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் வீட்டிலிருந்து வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் இதுவரை 130க்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டுமென்றால் ஊரடங்கு முடியும் வரை மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
அத்துடன் முகக்கவசம் அணிவது, கை கழுவுதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், விலகி இருத்தல் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. வீட்டிலிருந்து வெளியே செல்லும் மக்கள் முகக்கவசங்களை அணிந்துகொண்டு செல்லுங்கள் என மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடிசா அரசு முகக்கவசங்கள் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, வரும் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் வீட்டிலிருந்து வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒடிசாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முகக்கவசங்கள் குறைந்தபட்சம் இரண்டு அடுக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்கள் முகக்கவசங்களாக தங்கள் வீட்டிலிருக்கும் துணிகள் அல்லது கைக்குட்டைகளைக் கூட பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

