கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே மழை வேண்டி தவளைக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்து பொதுமக்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.
நாட்டின் பல்வேறு பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதியில் வெப்பம் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த சூழலில் மழை வேண்டி பலரும் நூதன முறையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். மழை வேண்டி சில முக்கிய கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி மழை வேண்டி இரு தவளைகளுக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்து, மஞ்சள் கயிற்றால் ஆன தாலியை கட்டி திருமணம் செய்து வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து தவளைகள் திருமணவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதேப்போல உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சுற்றியுள்ள பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தவளைகளுக்கு திருமணம் செய்யும் விழாவை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.