சுதந்திர போராட்ட வீரரை குற்றவாளி பட்டியலில் காட்டிய வெப் சீரிஸ்! வலுக்கும் கண்டனம்!
இளம் சுதந்திர போராட்ட வீரர் என்ற பெருமை கொண்ட குதிராம் போஸின் புகைப்படத்தை குற்றவாளி பட்டியலில் காட்டிய வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ZEE5தளத்தில் அபாய் 2 என்ற வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரிஸ் தற்போது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்த சீரிஸின் ஒரு காட்சியில் இளம் சுதந்திர போராட்ட வீரர் என்ற பெருமை கொண்ட குதிராம் போஸின் புகைப்படத்தை குற்றவாளி பட்டியலில் காட்டப்படுகிறது. இதனைக் கண்ட பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
ஒரு இளம் சுதந்திர போராட்ட வீரரை அவமதிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மன்னிப்பு கோரியுள்ள ZEE5, யார் மனதையும் புண்படுத்தும் உள்நோக்கம் எதுவும் இல்லை. ரசிகர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அந்த புகைப்படம் மறைக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
குதிராம் போஸ் ஒரு வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர் என்ற பெருமை கொண்ட இவர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசினார். இதற்கு தண்டனையாக தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறினார்.