காதலை கைவிட மறுத்த 16 வயது சிறுவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்தவர் ஜடின். வயது 16. விளையாட்டில் ஆர்வம் உள்ள இவர், 11-ம் வகுப்பு படிக்கிறார். தினமும் மாலையில் ஜாக்கிங் செல்வது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை ஜாக்கிங் செல்லும்போது, அவருக்கு தெரிந்த நான்கு நண்பர்கள், ‘வாயேன், உங்கிட்ட கொஞ்சம் பேசணும்’ என்று அழைத்தனர். போனார் ஜடின். அங்கிருந்த பாழடைந்த பங்களாவுக்குச் சென்றதும் மூன்று பேர் ஜடினை ஒரு சேரில் கட்டி வைத்தனர். வாயை டேப்பால் ஒட்டினர். பின்னர், ‘என் தங்கச்சியை லவ் பண்ணாதேன்னு சொன்னா, கேட்க மாட்டியா?’ என்று கேட்டுவிட்டு ஜடினின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினர். ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து அங்கேயே இறந்தார் ஜடின்.
பின்னர் இந்த சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொல்லி, தப்பிக்க என்ன செய்யலாம் என்று கேட்டனர். அவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மகன். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு தனது அப்பாவிடம் இந்த சம்பவத்தைச் சொன்னார். அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக அந்த பாழடைந்த பங்களாவுக்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பலியாகி இருந்த ஜடினின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.