முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் கடிதம்
புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 4 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 பேர் கடந்த 12-ம் தேதி திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை நீதிபதி ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியதாகவும் கூறி அந்த கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர். நாடு முழுவதும் இந்த விஷயம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் நரேந்திர மோடியும் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான சாவந்த், சந்துரு, ஏபி ஷா, சுரேஷ் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளனர். அதில், புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் ஒருசில நீதிபதிகளுக்கு மட்டுமே முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.