No Ball சொன்னதால் ஆத்திரம்.. அம்பயரை கொலைசெய்த கும்பல்.. ஒடிசாவில் நடந்த கொடூரம்!

தவறான முடிவை கூறிய கிரிக்கெட் நடுவரை (Umpire-ஐ) போட்டியாளர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்த நிகழ்வு ஒடிசாவில் அரங்கேறியிருக்கிறது.
Smruti Ranjan Rout
Smruti Ranjan Rout @ANI / Twitter

உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் no ball என அம்பயர் தவறான முடிவை எடுத்ததால் ஆத்திரமடைந்த போட்டியாளர்கள் சிலர், நடுவரை குத்திக் கொன்ற கொடூரம் ஒடிசாவில் அரங்கேறியிருக்கிறது.

நேற்று முன்தினம் (ஏப்.,02) ஒடிசாவின் கட்டக்கில் உள்ள மன்ஹிசாலந்தா என்ற கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றிருக்கிறது. இதில் ஷங்கர்புர் மற்றும் பிரஹ்மபுர் என்ற இரு கிராம அணிகளுக்கிடையான போட்டியின் போது, Umpire ‘நோ பால்’ என அறிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வாய்த்தகராறின் போது ஆத்திரமடைந்த பிரஹ்மபுரா கிராமத்தைச் சேர்ந்த ஸ்முதி ரஞ்சன் ரெளத் என்கிற முனா பொறுமையை இழந்து அம்பயரான லக்கி ரெளத்தை தாக்கியிருக்கிறார். இதற்கு பதில் தாக்குதலாக லக்கியும் ஸ்முதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியிருக்கிறார்.

இதனையடுத்து மோதல் முற்றவே ஸ்முதி ரஞ்சன் தன்னிடம் இருந்த கூரிய ஆயுதத்தால் லக்கி ரெளத்தை குத்தியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த லக்கியை மீட்டு அருகே இருக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியிலேயே லக்கி இறந்திருக்கிறார். இதனிடையே மைதானத்தை விட்டு தப்பிக்க முயற்சித்த ஸ்முதி ரஞ்சனை சூழ்ந்த பிற அணி வீரர்கள் ஸ்முதியை போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இது குறித்து பேசியிருக்கும் இணை அம்பயரும் லக்கியின் சகோதரருமான ப்ரிதி ரஞ்சன் சமல், “முகுதி ரெளத், ஜகா ரெளத் மற்றும் ஸ்முதி ரஞ்சன் ரெளத் ஆகிய மூவரும்தான் லக்கியை தாக்கினார்கள்.” என்றிருக்கிறார்.

இது குறித்து பேசிய கட்டக்கின் ஒன்றாம் மண்டல ஏ.சி.பி அருண் ஸ்வெய்ன், “இந்த விவகாரத்தில் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். விசாரித்துக் கொண்டிருக்கிறோம். தப்பியோடியவர்களை பிடிக்கும் வேலைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த நிலையில், லக்கியை அடித்தும், குத்தியும் கொன்ற வழக்கில் தொடர்புடைய நால்வரையும் கைது செய்திருப்பதாக டி.சி.பி பினக் மிஷ்ரா தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com