கள்ளத்துப்பாக்கியை விற்க முயன்ற வழக்கில் 'சர்கார்' நடிகர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் அருகில் உள்ள கே நாராயணபுரா பகுதியைச் சேர்ந்தவர் சையது சமீர் (32). பைனான்சியரான இவரது வீட்டில் கடந்த சில மாதங்க ளுக்கு முன் 1.98 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதில் முன் ஜாமின் பெற்றிருக்கிறார் இவர்.
சையது, பல தொழிலதிபர்களிடம் 3.5 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை வாங்கியுள்ளார். அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி தரவில்லை. இதனால் அந்த தொழிலதிபர்கள் அவரிடம் பணத்தை கேட்டுள்ளனர். அதை தரவில்லை என்றால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி வாங்க நினைத்தார். இதையடுத்து சிலரின் மூலம் கன்னட நடிகர் ஜெகதீஷ் என்ற ஜாக்குவார் ஜக்கி அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் கள்ளத் துப்பாக்கியை வாங்க முயன்றுள்ளார். ஜாக்குவார் ஜக்கி, கன்னடத்தில் வெளியான ’சர்கார்: தி புல்லட்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர். இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ஹிட்டானது.
இந்நிலையில் கள்ளத்துப்பாக்கி விற்பனை பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் பெங்களூரு ஹெச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் ஜெகதீஸும் அவர் நண்பரும் சிக்கினர். அவர்களிடம் 7.65 எம்எம் பிஸ்டல் மற்றும் 10 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, முகமது நிஜாம் (25) சதீஸ்குமார் (44), சையத் சமீர் அகமது (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.