உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி
உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரிஷ் ராவத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஹரிஷ் ராவத்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை மேக்ஸ் மருத்துவமனை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிஷ் ராவத்தின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியினர் மருத்துவமனைக்கு வரத்தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராவத், 2014ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின் போது வெற்றி பெற்று உத்தரகாண்டின் மூன்றாவது முதலமைச்சரானார். ஐந்து முறை எம்பியாக இருந்த இவர், மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை, விவசாயம் உணவு மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் ஹரிஷ் ராவத் இருந்துள்ளார்