உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகன் வயது முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த நீதிபதி மோகன், 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தார். மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்து, 1954ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை துவங்கினார். 1966இல் தமிழக அரசு உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, அரசு சிறப்பு வழக்கறிஞர், அரசு பிளீடர் போன்ற பதவிகளை வகித்தார். பின்னர், 1971ஆம் ஆண்டு தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
1974 பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 1988 டிசம்பர் 13இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று, 1989ஆம் ஆண்டு அக்டோபர் 26ல் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
அங்கிருந்தபோது, 1990 பிப்ரவரி 5 முதல் மே 8 வரை கர்நாடகா மாநில பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். 1991ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
சட்டம் சார்ந்து பல நூல்களை தமிழில் எழுதியுள்ள அவர், தேசிய சைபர் பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். மனித நேயம், இலக்கியம் ஆகியவற்றில் சீனா, மங்கோலியா நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்கள் உள்ளிட்டவற்றில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வயது முதுமையில் இருந்து வந்த அவர், உடல் நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவரது மனைவி திலகவதி ஏற்கனவே இயற்கை எய்திவிட்டார். இவர்களுக்கு கவுதமன் மோகன் என்ற மகனும், சுமதி சுப்பிரமணியன் என்ற மகளும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வெங்கிடகிருஷ்ண அய்யர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.