கர்நாடக தர்மஸ்தளத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கொலை: முன்னாள் சுகாதார ஊழியர் பரபரப்பு புகார்..!
' பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்திருக்கிறேன்' என முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
கர்நாடகாவின் தர்மஸ்தள கிராமத்தில் முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர் சில கொலைகளை நேரில் கண்டதாகவும், நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களை புதைத்ததாகவும் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தையே உறைய வைக்ககூடிய இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கர்நாடகாவில் முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பல உடல்களை புதைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். வழக்கறிஞர்கள் ஓஜஸ்வி கௌடா மற்றும் சச்சின் தேஷ்பாண்டே ஆகியோரால் அவரது கடிதம் வெளியிடப்பட்ட பின்னர், கர்நாடகத்தில் இருக்கும் தர்மஸ்தள போலீசார் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1995 முதல் 2014 வரை தர்மஸ்தளத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிய அவர், சில கொலைகள் "கொடூரமான முறையில்" நடத்தப்படுவதை கண்டதாகவும், பின்னர் அந்த உடல்களை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். புதைக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்கள் இளம் பெண்கள் என்றும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். 1998ல் உடல்களை புதைக்க மறுத்து போலீசுக்கு தகவல் தர முற்பட்ட போது அங்கிருந்தவர்கள் அவரை அடித்து கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். சில உடல்களை டீசல் ஊற்றி எரித்ததாகவும், மற்ற உடல்களை தர்மஸ்தள கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் புதைத்ததாகவும் கூறியிருக்கிறார். 2014க்கு பின் தனது உயிருக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து வேறொரு மாநிலத்துக்கு சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், உடல்கள் தோண்டி எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த மரணங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மரணங்களுக்குப் பின்னால் சக்தி வாய்ந்த நபர்கள் இருப்பதாகவும், தனக்கும் , தன் குடும்பத்திற்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டால் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
குற்ற உணர்வு தன்னை வேட்டையாடுவதாகவும், அதனாலேயே இப்போது இதை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சமீபத்தில் வந்த அவர், அங்கிருந்த சில உடல்களை தோண்டி, எலும்புகளை ஆதாரமாக காவல்துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து உடல்களைத் தோண்டி எடுக்கும் பணிகளை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெறும் திட்டத்துடன், முழுமையான விசாரணை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக கர்நாடக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.