“பணமதிப்பிழப்பு விவசாயிகளை மோசமாக பாதித்தது” - மத்திய விவசாய அமைச்சகம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு விவசாயிகள் விதைகள், உரங்கள் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் நிதி விவகாரம் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கவே பணமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையால் விவசாயிகள், சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்கட்சிகள் ஏற்கனவே கூறி வந்தன.
இந்நிலையில், தற்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் பாராளுமன்ற குழுவில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நிதி விவகாரங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய விவசாயத்துறை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில், பருவகால பயிர்களை விற்பனை செய்யும் அல்லது குருவை பயிர்கள் விதைக்கின்ற காலங்களில் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு விவசாயிகள் விதைகள், உரங்கள் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றாட வாழ்வில் விவசாயம் பார்க்கும் தொழிலாளர்களுக்கு பணம் தர முடிவதில்லை எனவும் அதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் எடுக்க முடியாததால் 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகள் விற்கப்படவில்லை எனவும் சில நாட்களுக்கு பிறகு கோதுமை விதைகளை விற்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அளித்த விலக்கு பெரிதாக எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் 263 மில்லியன் விவசாயிகள் ரொக்கப் பணத்தை நம்பியே உள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தினேஷ் திரிவேதி தலைமையிலான மத்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2017-ல் ஜனவரி ஏப்ரல் மாதம் வரையில் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.