குக்கி பழங்குடி மக்களும், மெய்தி மக்களும் பல நுற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்ததைதான் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் கடந்த மே 3 ஆம் தேதி மெய்தி சமூக மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி சமூகத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை தொடர்ந்து வருகிறது. இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தற்போது வரை 120க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். பல கிறிஸ்தவ தேவாலயங்கள், பலரது வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரை ஆளும் பாஜக அரசில் எம்.எல்.ஏ.க்களாக மெய்தி சமூகத்தினரே பெரும்பான்மையாக இருப்பதால் பாஜக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது என எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடன் கடந்த 24 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் வைத்தே உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இத்தனை ஆலோசனைகளுக்குப் பின்னும் மணிப்பூரில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
முன்னதாக மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே (MOREY) கிராமத்திற்கு நாம் சென்று பார்த்த போது தமிழர்கள் பலரும் தங்களது தற்போதைய நிலையை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய காளியம்மாள் என்பவர், “மியான்மர் நாட்டின் எல்லைக்கருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், குக்கி மக்கள் வசிக்கிறார்கள். குறிப்பிடத்தகுந்த அளவில் தமிழ் மக்களும், நேபாள மக்களும் வாழ்கிறார்கள். இங்குள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் இப்போது விழாக்காலம் இல்லை என்றாலும், கூட்டத்தை காண இயலவில்லை. அனைத்துச் சூழல்களுக்கும் பழகி இங்கு வாழ்கிறோம்.
கடந்த 3 ஆம் தேதி நான் மியான்மர் போய்விட்டு வீடு திரும்பினேன். அப்போது வீடு எரிகிறது என்றும், வீட்டைவிட்டு வெளியே வருமாறும் எல்லோரும் கத்தும் சத்தம் கேட்டது. நான் வெளியே ஓடிவந்துவிட்டேன். என் ஆதார் அட்டையைகூட எடுக்க முடியவில்லை. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்துவிட்டன. மணிப்பூர் தமிழ்ச் சங்கம்தான் எங்களுக்கு தஞ்சம் கொடுத்திருக்கிறது. இதோ எரிந்து கிடக்கும் இந்த இடம்தான் எனது வீடு. இதுதான் எங்களின் நிலைமை” என்றார் கண்ணீருடன்.
இந்நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து மணிப்பூரில் பணியாற்றிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிருந்தா உடன் புதிய தலைமுறை செய்தியாளர் நேர்காணல் நிகழ்த்தினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஐபிஎஸ் பிருந்தா, “மணிப்பூரின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. மணிப்பூர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பயங்கரமான வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. மணிப்பூரின் மாநில அரசு, மத்திய அரசுகளாலும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
வன்முறைகள் கட்டுக்குள் வந்துவிட்டது என்றால் மணிப்பூரில் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய மக்கள் தங்களது பகுதிகளுக்கு மீண்டும் திரும்பி இருக்க வேண்டுமல்லவா? மக்கள் யாரும் தங்கள் பகுதிகளுக்கு திரும்பவில்லை. எனவே வன்முறை கட்டுக்குள் வரவில்லை என்பதே உண்மை.
மணிப்பூரில் வன்முறைகள் பலநாட்களாக நடந்து வரும் சூழலில் அதை கட்டுக்குள் கொண்டு வர அரசு தாமதப்படுத்துவது ஏன்? இது போன்ற வன்முறைகள் நாட்டின் வேறு எந்த பகுதிகளிலும் நடந்ததில்லை. மாநிலம் முழுவதும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிள்ளது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அமைதி காப்பது ஏன்?
மணிப்பூர் கலவரத்திற்கு மாநில அரசு தான் முழுக் காரணம். மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர் குலைந்தால் மாநில அரசு தான் அதற்கு முழு பொறுப்பு. எனவே உள்துறை அமைச்சகத்தை தன்னிடம் வைத்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.