சிஏஜி-யின் புதிய தலைவராக ராஜிவ் மெஹரிஷி நியமனம்
மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சிஏஜியின் புதிய தலைவராக முன்னாள் உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹரிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சிஏஜி) அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை, பாராளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது.
இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சஷிகாந்த சர்மாவின் பதவிக்காலம் செப்டம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், ராஜிவ் மெஹரிஷி சிஏஜியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பொறுப்பேற்கிறார்.
1978-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் முடித்த ராஜிவ் (62) கடந்த மாதம் தனது இரண்டு வருட உள்துறை செயலாளர் பொறுப்பை நிறைவு செய்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜிவ்க்கு ராஷ்டிரபதி பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சிஏஜி தலைவர் பதிவியில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது முடியும் வரை இருக்க முடியும். ராஜிவ்-க்கு 62 வயது என்பதால், 3 ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும்.