முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு – தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு – தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு – தமிழக தலைவர்கள் இரங்கல்
Published on

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழகத்தின் முன்னாள் ஆளுநருமான ரோசய்யா அவர்கள் காலமானதைக் கேள்விப்பட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். ரோசய்யா அனுபவமும், அறிவாற்றலும் நிறைந்த மூத்த அரசியல்வாதி ஆவார்.  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

ரோசய்யாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ரோசய்யா அவர்கள் இன்று மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், “முன்னாள் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் மற்றும் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி., அமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் என பல்வேறு பதவிகளை வகித்து நீண்ட கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தவர் ரோசய்யா அவர்கள். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”  எனத் தெரிவித்தார்

ரோசய்யாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், “ரோசய்யா அவர்கள் ஆந்திர மாநிலத்தில் பல துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டவர். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஆந்திர மாநில முதல்வராகவும், தமிழக ஆளுநராகவும் திறம்பட செயலாற்றியவர். அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com