இந்தியா
“என் அன்புக்குரிய தேசத்தினர் அழுவதைத் தவிர வேறு வழியில்லை ” - ப. சிதம்பரம் வேதனை
“என் அன்புக்குரிய தேசத்தினர் அழுவதைத் தவிர வேறு வழியில்லை ” - ப. சிதம்பரம் வேதனை
ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிரப் பிரதமர் மோடியின் அறிவிப்பில் புதிதாக ஒன்றும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக இன்று காலை 10 மணிக்கு அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். ஊரடங்கும் சமூக விலகலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது” என அறிவித்தார்.
இதனிடையே இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 10,363 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் புதிய உத்தரவு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ஏற்கனவே 21 நாட்கள், தற்போது மேலும் 19 நாட்கள் வரை ஏழை, எளிய மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு தேவையான உணவு, பணம் ஆகியவற்றை மத்திய அரசு வழங்காது என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கும், அவர்கள் உயிர் வாழ்வதற்கும் அரசு எந்த முன்னுரிமையும் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நிதி கேட்டு முதலமைச்சர்கள் விடுத்த கோரிக்கை குறித்தும் பிரதமர் மோடியின் உரையில் எந்தப் பதிலும் இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ள சிதம்பரம், தனது அன்புக்குரிய தேசத்தினர் அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.