நடுரோட்டில் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்த கிரிகெட் ஜாம்பவான்!
பெங்களூரில் தன் கார் சேதம் அடைந்ததால் கோபம் அடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நடு ரோட்டில் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கன்னிங்ஹாம் சாலையில் ராகுல் டிராவிட் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக காரின் முன்பகுதியில் உரச லேசாக சேதம் அடைந்தது.
உடனே காரில் இருந்து இறங்கிய டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் காரின் முன்பகுதியை காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டோ டிரைவரும் ராகுலுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். சம்பவத்தை அறிந்து அப்பகுதியினர் கூடினர். பின்னர், டிரைவரின் வீட்டு முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட டிராவிட், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் எவ்வித புகாரும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் டிராவிட் வாக்குவாதம் செய்ததை கண்ட ஒருவர், நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.