
கர்நாடகா மாநிலத்தில், 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் (மே) 10ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாஜக இரண்டு கட்டங்களாக 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இதன்மூலம் 18 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதில் மாடல் விருபக்ஷப்பா, எம்.பி குமாரசாமி, சி.எம்.நம்பன்னவர், எஸ்.ஏ.ரவிந்திரநாத், நேரு ஓலேகர், என்.லிங்கனா, சுகுமார் ஷெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதுபோல், பாஜக மேலவை உறுப்பினரான ஆர்.சங்கரும் ரனேபென்னூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர், மட்டுமின்றி மீண்டும் வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் அமைச்சர் எஸ்.அங்கார், எம்.எல்.ஏக்கள் எம்.பி.குமாரசாமி, நேரு ஒலேகர், கூளிகட்டி சேகர் உள்ளிட்டோர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளனர்.
அதேபோல், மீண்டும் சீட் கிடைக்காத முன்னாள் துணை முதல்வரும், கர்நாடக பா.ஜனதா துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான லட்சுமண் சவதியும் பாஜகவிலிருந்து விலகி, குமாரசாமி முன்னிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அதுபோல், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குருபாட்டீல் சிரதாள் ஜனதா தளத்தில் இணைந்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த சந்தேஷ், முனேந்திரா, ரகுபதிபட், அனில் பெலகே, நிம்மண்ணனவர், சுகுமார் ஷெட்டி உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இதில், சந்தேஷ் சுயேட்சையாய்ப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பதும், வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சனசூர், என்.ஒய்.கோபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி, பாஜகவைச் சேர்ந்த சிலர், அக்கட்சியிலிருந்து விலகிவரும் நிலையில், இன்று அக்கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் ஷெட்டரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
இதுதொடர்பாக, இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், ”30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றியும், பாஜக தன்னை நடத்திய விதம் வேதனை அளிக்கிறது. சுயேட்சையாகப் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெகதீஷ் ஷெட்டர் விலகல் குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “ஜெகதீஷ் ஷெட்டரை கர்நாடக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜெகதீஷ் ஷெட்டரின் குடும்பத்திற்கு சீட் வழங்கினோம். ஆனால், அவர் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. தற்போது அவரது செயல்பாடு எனக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர் என்பவரை பாஜக மூலம்தான் மக்களுக்கு தெரியும்” என்றவரிடம் “ஜெகதீஷ் காங்கிரஸில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகிறதே” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா, “எதற்காக, அவர் காங்கிரஸில் இணைய வேண்டும்? அவர் பாஜகவுக்கு மீண்டும் வந்தால் நாங்கள் வரவேற்போம்” என்றார்.
ஜெகதீஷ் ஷெட்டரின் விலகல், பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சியில் சேர மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகியதால், கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் 30 தொகுதிகளை, பாஜக பறிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.