தாஜ்மஹாலில் ஏற்பட்ட அசௌகரியம்... வீடியோ மூலம் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த வெளிநாட்டு பயணி!
காதல் சின்னமான தாஜ்மஹாலை காண வந்த வெளிநாட்டு பயணி ஒருவர், அங்கு தனக்கு நேர்ந்த அசௌகரியமான சம்பவத்தை பகிர்ந்து இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். அது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளான ஒன்றாக மாறியுள்ளது.
ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜ்க்கு கட்டிய காதல் சின்னமும், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவதுமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வருவதுண்டு. எப்படியாவது தாஜ்மஹாலை காண வேண்டும் என்று நினைப்பவர்கள் நம்மை சுற்றிலும்கூட பலர் உண்டு. அப்படித்தான், உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நுராத் என்பவர் தனது தந்தையுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.
தாஜ்மாஹாலை காணவந்த நுராத், தாஜ்மஹாலை மிக மகிழ்ச்சியாக கண்டு களித்ததாகவும் ஆனால், ஒரு சில விஷயங்கள் தனக்கு அதிப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் இதுவரை 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். இன்று நான் தாஜ்மஹாலை பார்க்க இந்தியா வந்துள்ளேன். இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இந்திய அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.
இங்கே உள்ள பாதுகாப்பு அமைப்பு அமைப்பில் அரசு கூட்தல் கவனம் செலுத்தவேண்டும். பல உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலுக்கு வருகை தருகின்றனர். அது மகிழ்ச்சியே. இருப்பினும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல மைல்கள் கடந்து இங்கே வரும்போது அவர்களை கருத்தில்கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிக்களுக்கு ஒரு தனி வரிசை இருந்தால் நன்றாக இருக்கும். தற்போதுள்ள வரிசையால், நீண்ட நேரம் ஒரே வரிசையிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனது வயதான தந்தையும் நீண்ட நேரம் வரிசையில் நின்றதன் காரணமாக அவருக்கு உடல்நிலை சோர்வடைந்தது” என நுராத் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப்பயணியின் இந்த கருத்து இணையவாசிகள் மத்தியில் அதிக விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், தாஜ்மஹாலின் பாதுகாப்பு உதவியாளரான பிரின்ஸ் வாஜ்பாய் என்பவர் இதுகுறித்தான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “தாஜ்மஹாலுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைய தனி ஏற்பாடு உள்ளது. எவ்வாறாயினும், உள்ளே நுழைந்தவுடன், அனைத்து பார்வையாளர்களும் ஒரே மாதிரியான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்படுகிறார்கள். யாருக்கும் தனித்தனி வரிசை என்பது இல்லை. தாஜ்மஹாலின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணி பகிர்ந்த வீடியோ அவரது தனிப்பட்ட கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.