திருவிழாக்களில் திட்டம் போட்டு திருடி வந்த வெளிநாட்டு கும்பல் - சகோதரிகள் கைது
கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சகோதரிகள் 3 பேரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 4 ஆம் தேதி கோவை கோணியம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தத் திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இ்ந்தக்கூட்ட நெரிசலை பயன்படுத்தி10 பெண்களிடம் 35 பவுன் நகைப்பறிப்பு நடந்ததாக கோவை பெரியகடை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சென்னை திருவான்மியூரை சேர்ந்த அக்கா, தங்கை முறை கொண்ட இந்துமதி, பராசக்தி, செல்வி ஆகியோரை கைது செய்தனர். இதில் பராசக்தி கணவருடன் இலங்கையிலும், செல்வி கணவருடன் லண்டனிலும் இந்துமதி கேரள மாநிலம் திருச்சூரில் கணவர் பாண்டியராஜனுடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேற்கொண்டு நடந்த விசாரணையில் இவர்கள் ஆன்லைன் மூலம், தமிழகத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களை தெரிந்து கொண்டு, தமிழகம் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதும் இதற்காக அவர்கள் எப்படி தீட்டம் தீட்டியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
முதலில் பாண்டியராஜன் இணையதளத்தில் எந்தெந்த கோயில்களில் எப்போது திருவிழாக்கள் நடக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடித்து, அதனை தன் மனைவி இந்துமதிக்கு தெரிவித்துள்ளார். இந்துமதி அதனை இலங்கை மற்றும் லண்டனில் வசிக்கும் தன் சகோதரிகளுக்கு தெரிவித்து, செல்வியும், பராசக்தியும் டூரிஸ்ட் விசாவில் விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து ஓட்டலில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். அதன் பின்னர் அவர்களுடன் இந்துமதியும் அவரது கணவர் பாண்டியராஜனும் சேர்ந்து கொண்டு, நகைப் பறிப்பில் ஈடுபடுகின்றனர். பிறகு அந்த நகைகளை விற்று பெறப்படும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு மீண்டும் ஊருக்கே சென்றுள்ளனர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து உக்கடம் ஓட்டலில் தங்கி இருந்த மூன்று சகோதரிகளையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

