ஒரேயொரு Mailதான்.. சுற்றிச்சுழன்ற பெங்களூரு Airport நிர்வாகம்; சுவாரஸ்ய நிகழ்வின் பின்னணி!

ஒரேயொரு Mailதான்.. சுற்றிச்சுழன்ற பெங்களூரு Airport நிர்வாகம்; சுவாரஸ்ய நிகழ்வின் பின்னணி!
ஒரேயொரு Mailதான்.. சுற்றிச்சுழன்ற பெங்களூரு Airport நிர்வாகம்; சுவாரஸ்ய நிகழ்வின் பின்னணி!

உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் ஒரு பொருளை தொலைத்து விட்டால், `அது மீண்டும் கிடைக்குமா’ என்பதில் சந்தேகமே எவருக்கும் இருக்கும். கடலில் போட்ட ஊசிபோல, நம் பொருள் என்ன ஆகுமே என்றே பொதுபுத்தி இருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல, நம் பொருள்கள் நிச்சயம் கிடைக்கும் என மெய்ப்பித்து காட்டியிருக்கிறது பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த சம்பவம்.

கூட்டம் நிறைந்த சந்தை, பொது போக்குவரத்து நிலையங்களில் இஷ்டமான பொருளாகவே இருந்தாலும் ஒருமுறை தொலைத்துவிட்டால் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்த்திடவே முடியாது. ஆனால் ஏதோ ஒரு அதீத நம்பிக்கையில் அந்த தொலைந்த பொருள் நல்வாய்ப்பாக வந்து சேர்ந்தால் மட்டுமே உண்டு.

அந்த வகையில், ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்டெர்ஸ் ஆண்டெர்சென் என்பவர் இந்தியாவுக்கு தொழில் ரீதியான பயணம் மேற்கொண்டு மீண்டும் ஜெர்மனிக்கு திரும்ப பெங்களூரு கெம்ப்பே கவுடா விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அங்கு பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு விமானம் ஏறியவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

அதாவது, ஆண்டெர்செனின் கைக்கடிகாரம் விமான நிலைய எக்ஸ்-ரே ட்ரேவில் தொலைந்துப் போயுள்ளது. இதனையறிந்து கவலையுற்ற அவர், உடனடியாக பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் - இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் வர்த்தக பார்ட்டனராக இருக்கக் கூடிய TCS-க்கும் மெயில் மூலம் நடந்ததை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த விவரம் கிடைத்ததும் விமான நிலையத்தில் தவறவிடப்பட்ட ஆண்டெர்செனின் வாட்ச்சை மீட்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். இது தொடர்பாக ஆண்டெர்சென் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் உணர்ச்சி ததும்ப மிகவும் உருக்கமாக பதிவிட்டு தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

அதில் ஆண்டெர்சென் குறிப்பிட்டுள்ளதன் விவரம் வருமாறு:

“தொழில் விஷயமாக இந்தியா வந்திருந்த எனக்கு நம்ப முடியாத அளவுக்கான புதிய அனுபவம் கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஜெர்மனி திரும்பும் போது கிடைத்த அனுபவம் மிகவும் சிறப்பான தருணமும் கூட. பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளின் போது என்னுடைய வாட்ச்சை தொலைத்துவிட்டேன். அந்த வாட்ச் என்னுடைய பிறந்த நாள் பரிசாக என்னுடைய பாட்டி எனக்கு கொடுத்ததாக இருந்ததால் அதன் மீது எனக்கு அதீத சென்டிமென்ட் உண்டு.

ஆகையால் இது குறித்து பெங்களூரு ஏர்ப்போர்ட் நிர்வாகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் , பிசினஸ் பார்ட்னரான டி.சி.எஸ்-க்கும் மெயில் அனுப்பினேன். 1.4 பில்லியன் மக்கள் உள்ள நாட்டில், ஆண்டுதோறும் 16 மில்லியன் பேர் பயணிக்கும் பெங்களூரு ஏர்ப்போர்ட்டில் தொலைந்த என்னுடைய வாட்ச் எப்படியாவது கிடைத்துவிடுமா என்ற எண்ணிக்கொண்டேயிருந்தேன்.

அந்த நினைப்பையெல்லாம் என் மெயில் சென்றடைந்த இருபதே நிமிடங்களில் மாற்றியது நடந்த சம்பவம். அதாவது, என் மெயில் பெங்களூரு விமான நிலைய நிர்வாகத்துக்கு சென்றடைந்ததும், அடுத்த 14 நிமிடத்தில் டி.சி.எஸ் தரப்பில் இருந்தும் அங்கு சென்றிருக்கிறார்கள். இதையறிந்ததும் என் வாட்ச் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

சரியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.41 மணிக்கு, நான் நினைத்ததுபோலவே பெங்களூரு விமான நிலையத்தின் Terminal Lost & Found நிர்வாகத்திடம் இருந்து என்னுடைய வாட்ச் மீட்கப்பட்டுவிட்டதாக மெயில் வந்தது. அது நம்ப முடியாத அளவுக்கு என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. இதையடுத்து டி.சி.எஸ்-ல் இருந்து ஏர்ப்போர்ட்டுக்கு சென்றவர் அங்கிருந்து வாட்சை வாங்கிக் கொண்டு டென்மார்க்குக்கு அனுப்பிவைத்து, இப்போது என் பாட்டி கொடுத்த வாட்ச் மீண்டும் என் கைக்கே வந்து சேர்ந்திருக்கிறது.

இது எவராலும் எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு அதிகமாகவே உள்ளது மற்றும் அனைவரது ஒத்துழைப்புக்கும் நன்றிக்கடன் பெற்றவனாக இருக்கிறேன். நேர்த்தியான தொழில்முறை, செயல்திறனோடு ஒத்துழைப்பு கொடுத்த பெங்களூரு விமான நிலைய நிர்வாகம், டாடா குரூப் சர்வீஸ் டீம் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். ஒரு செயல்பாட்டின் நோக்கம் புரிந்து கனக்கச்சிதமாக தொழில்முறையோடு ஒரு செயலை செய்வதற்கான நடைமுறை உதாரணமாகவே இந்த நிகழ்வு இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆண்டெர்செனின் இந்த பதிவைக் கண்ட பல லின்க்ட் இன் பயனர்களும் அவரது இந்த அனுபவத்தை கண்டு வியப்படைந்துப் போய் பதிவிட்டதோடு, விமான நிலைய சோதனையின் போது பொருட்களை தொலைத்துவிடாமல் இருக்க அவற்றை எடுத்துச் செல்லவென தனியாக ஒரு பிளாஸ்டிக் பையையும் உடன் வைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com