“கட்டாய வட்டி தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஆபத்து” - ரிசர்வ் வங்கி
கட்டாய வட்டி தள்ளுபடி என்பது வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடன் பெற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பொது முடக்கத்தில் முடிந்த அளவு உதவியை தாங்கள் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அவர்களின் கடன் தவணை நெருக்கடியைக் குறைக்கவும் முடிந்த வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கடன்பெற்றவர்கள் செலுத்தும் தவணை காலத்தை மூன்று மாதங்கள் தள்ளிவைத்த நிலையில், பின்னர் மேலும் மூன்று மாதங்கள் தள்ளி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் வட்டியைக் கட்டாயமாகத் தள்ளுபடி செய்வது வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை வைப்புத் தொகையாவார்களின் வட்டிக்கு ஆபத்தானது எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே தவணைகள் தள்ளிவைப்பு காலத்தில், கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாகக் கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.