பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்த ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தால் யாருக்கு? என்ன பயன்?

பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்த ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தால் யாருக்கு? என்ன பயன்?

பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்த ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தால் யாருக்கு? என்ன பயன்?
Published on

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர் கிசான் சம்மான் சம்மேளன் 2022-ஐ இன்று தொடங்கி வைத்து "ஒரே நாடு ஒரே உரம்" என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் 16 ஆயிரம் கோடி பிரதமரின் கிசான் நிதியை விடுவித்தார். ஒரே நாடு ஒரே உரம் என்றால் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே பெயரில்தான் இனி உர விற்பனை:

இந்தியா முழுவதும் யூரியா, டி.ஏ.பி., எம்.ஓ.பி. மற்றும் என்.பி.கே. போன்ற எல்லா உர நிறுவனங்களும், இனி 'பாரத்' என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும். பாரத் யூரியா, பாரத் டி.ஏ.பி., பாரத் எம்.ஓ.பி. மற்றும் பாரத் என்.பி.கே. போன்ற பெயர்களில்தான் இனி உரம் விற்கப்படும்.

முத்திரையிலும் இனி மாற்றம்:

மேலும், உர மானியத் திட்டத்தை குறிக்கும் முத்திரை, பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், முத்திரை மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்பு தகவல்களை தங்கள் பைகளில் மூன்றாவது பட்டியில் மட்டுமே காட்ட அனுமதிக்கப்படுகிறது. மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு அதாவது முதல் இரண்டு பட்டியில், "பாரத்" பிராண்ட் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா முத்திரை காட்டப்பட வேண்டும்.

விற்பனைக்கு இனி புது சாக்குப்பைகள் மட்டுமே அனுமதி:

இனி இந்த புதிய விதிமுறைப்படி உரத்தை விற்கும்போது புதிய சாக்கு பைகளைதான் பயன்படுத்தவேண்டும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பழைய உரமூட்டைகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம்:

அனைத்து மானிய உரங்களுக்கும் ஒரே 'பாரத்' முத்திரையை அறிமுகப்படுத்துவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவின் விலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின் உற்பத்திச்செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது.

உணவுக்கு அடுத்தபடியாக உரங்களுக்கே அதிக மானியம்:

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உணவு மானியத்திற்கு அடுத்ததாக, உரத்திற்குதான் அரசு அதிகளவில் பணத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. அதாவது சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் அந்த மானியம் ஒதுக்கப்படுகிறது. யூரியா தவிர, டி.ஏ.பி., எம்.ஓ.பி. போன்ற உரங்களின் விலையை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை. ஆனாலும் அதற்கு மானியம் தர வேண்டியுள்ளது. மானியம் பெற்றாலும், உர நிறுவனங்களின் பெயரில்தான் உரம் விற்பனை ஆகிறது என்பதால், பெயரை பொதுபெயராக மாற்ற வேண்டும் என அரசு எண்ணுகிறது.

மானியத்தில் ஈடுசெய்யப்படும் உர நிறுவனங்களின் செலவுகள்:

உர நிறுவனங்களுக்கு ஏற்படும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவு போன்றவை மானியத்தில் ஈடுசெய்யப்படுகிறது. ஆனால், ஒரே விதமான உரங்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள், பல விதமான பிராண்ட் பெயர்களை கொண்டிருப்பதால், அவை தயாரிக்கும் இடங்களில் இருந்து விற்பனை ஆகும் இடங்களுக்கு சென்று சேருவதற்கு ஆகும் செலவில், அரசின் மானியமும் பெரியளவில் வீணாவதாக மத்திய அரசு கருதுகிறது. இதனால், உரங்களின் சரக்கு கட்டணத்தை குறைப்பது மற்றும் ஆண்டு முழுவதும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டத்தை கொண்டுவருவதாக மத்திய அரசு கூறுகிறது.

உடன்பட மறுக்கிறதா உர நிறுவனங்கள்:

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு உர தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எல்லா உர நிறுவனங்களின் உரம் ஒரே பெயரில் விற்கப்பட்டால் ஒருவேளை, ஏதாவது ஒரு உரமூட்டையில் தரம் குறைவாகவோ, அல்லது மோசமாக இருந்தால், ஒட்டுமொத்தமாக விவசாயிகள் எல்லா பிராண்ட் உரங்களை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தலாம். அந்த விளைவுகளை எல்லா நிறுவனங்களும் ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது உர நிறுவனங்களின் வாதம்.

எதிர்ப்பை மீறி துவங்கிய திட்டம்:

இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி "ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் இனி விவசாயிகளுக்கு மலிவு விலையில் "பாரத் பிராண்டின்" தரமான உரம் கிடைக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். குறிப்பாக யூரியா உரம் கள்ளச்சந்தையில் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுதல் போன்றவற்றை சமாளிக்க வேண்டிய நிலை இருந்தது.

அதே நேரத்தில் நாட்டின் 6 பெரிய யூரியா தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கடுமையாக உழைத்தோம். அவை பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. திரவ நானோ யூரியா உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ஒரே நாடு ஒரே உரம் மூலம் உரத்தின் தரம் மற்றும் அதன் இருப்பு பற்றிய அனைத்து வகையான குழப்பங்களில் இருந்தும் விவசாயிகள் இனி விடுபட போகிறார்கள். விவசாயிகளுக்கு இனி மலிவு விலையில் உரம் கிடைக்கப்போகிறது” என தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

- விக்கேஷ் முத்து, ச.முத்துகிருஷ்ணன்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com