சாலையில் துப்பிய நபருக்கு நாட்டிலேயே முதன்முறையாக அபராதம்
பான் மசாலா மென்று சாலையில் துப்பிய நபருக்கு நாட்டிலேயே முதன்முறையாக அகமதாபாத்தில் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
நாட்டிலேயே தூய்மையான நகரங்களின் பட்டியலில் அகமதாபாத் இடம்பெற்றுள்ளது. கௌரவமான இந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள நகர நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பான் மசாலா மென்று சாலையில் துப்பிய மகேஷ்குமார் என்ற நபருக்கு, அகமதாபாத் நகர நிர்வாகம் நூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அகமதாபாத்தின் நரோடா என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அபராத நடவடிக்கை நாட்டிலேயே முதன்முறையான மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.