முதன்முறையாக கேரள டிஜிபியாக பெண் அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்பு
முதன்முறையாக கேரள காவல்துறைத் தலைவர் பதவிக்கு ஒரு பெண் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேரள காவல்துறைத் தலைவர் பதவிக்கு முதல் முறையாக ஒரு பெண் தேர்வு செய்யப்பட இருக்கிறார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) குழு கேரள மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு போலீஸ் டைரக்டர் ஜெனரல் பதவிக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய மூன்று பேரின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. பரிந்துரைக்கப்பட்ட மூவரில் கேரள தீயணைப்புத் துறை தலைவராக இருக்கும் பி.சந்தியாவும் ஒருவர்.
இந்தப் பட்டியலில் உள்ள மற்ற இரண்டு பெயர்கள் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பணியகத்தின் இயக்குநர் சுதேஷ் குமார் மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அனில் காந்த். இந்த மூவரில் பி.சந்தியா மற்றும் சுதேஷ்குமார் தற்போது போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) பதவி ரேஸில் முன்னிலையில் உள்ளனர். அனில் காந்த் தற்போது கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் பதவியில் இருக்கிறார்.
இந்த மூவரில் இருந்து ஒருவர் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார். புதிய கேரள காவல்துறைத் தலைவராக சந்தியாவிற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் கேரள டிஜிபியாக வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அந்தப் பதவியை அலங்கரிப்பார்.
முன்னதாக, இந்தப் பதவிக்கு 30 ஆண்டுகள் சேவையாற்றிய 9 நபர்களின் பட்டியலை மாநில அரசு யு.பி.எஸ்.சி.-க்கு வழங்கியது. கேரள அரசாங்கத்தின் 9 பேர் பட்டியலில் மூத்த போலீஸ் அதிகாரியும் தற்போது, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் தலைவரான அருண்குமார் சின்ஹாவும் ஒருவர். மத்திய அரசு பணியில் இருக்கும் அவர், கேரளாவுக்கு திரும்ப ஆர்வமில்லாமல் இந்த நிலைப்பாட்டில் தனக்கு விருப்பமில்லை என்று யுபிஎஸ்சி குழுவுக்கு சின்ஹா தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் அளித்த 9 பேர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் 1987 முதல் 1991 வரையிலான ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர்கள். மேலும் டிஜிபி மற்றும் ஏடிஜிபி தரவரிசை அதிகாரிகள். அவர்கள் அனைவரும் முப்பது ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ளனர். நீண்ட காலமாக, காவல்துறைத் தலைவர்கள் மாநில அரசுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரும்பாலும், அதிகாரிகளின் வயது மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இந்த முறை மாறிவிட்டது. அதன்படி, யுஜிஎஸ்பி கமிட்டி பரிந்துரைத்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள காவல்துறைத் தலைவராக இனி தேர்ந்தெடுக்கப்போகும் தலைவர் இருப்பார்.