175 ரூபாய்க்காக இழைக்கப்பட்ட அநீதி - 95 வயது மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்த மசூதி

175 ரூபாய்க்காக இழைக்கப்பட்ட அநீதி - 95 வயது மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்த மசூதி

175 ரூபாய்க்காக இழைக்கப்பட்ட அநீதி - 95 வயது மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்த மசூதி
Published on

கேரளாவில் 95 வயதுடைய மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மசூதி கமிட்டி மறுத்துவிட்டதாக அவரது மகள்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கொல்லம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள தட்டமாலா பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா பீவி. இவருக்கு நான்கு மகன்கள். திருமணமான சில வருடங்களிலேயே கதீஜாவை கைவிட்டு சென்றுவிட்டார் அவரது கணவர். 95 வயது மூதாட்டியான கதீஜா பிப்ரவரி 10-இல்  உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக ‘தான் உயிரிழந்தால் தட்டமாலா மசூதியில் தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்.

ஆனால், தட்டமாலா ஜமாத் கமிட்டி கதீஜா உடலை அடக்கம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகள்கள் கூறுகையில், “மசூதியில் உறுப்பினர் தொகையை கட்ட தவறிவிட்டார் என கமிட்டி கூறியது. உறுப்பினருக்கான மாதக் கட்டணம் ரூ175. கடைசி மாதம் வரை கட்டணம் செலுத்தியதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. எங்களுடைய தந்தை புதைக்கப்பட்ட மசூதியில் தாயையும் அடக்கம் செய்யுமாறும் கமிட்டி கூறுகிறது” என்றார்.

மேலும், கதீஜாவின் மகளான முதும் பீவி கூறுகையில், “எங்களுக்கு எங்களது தந்தையையோ, அவரது உறவினர்களையோ ஞாபம் கூட இல்லை. பின்னர் எப்படி ஜமாத் கமிட்டி கூறுவது போல் எங்களால் தந்தை இறந்த இடத்தில் அடக்கம் செய்ய முடியும். எங்களுடைய தாய் எங்களை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். நாங்கள் சிறு வயதாக இருந்தபோது, எங்கள் உறவினர்கள் வீட்டில் வளர்ந்தோம். இந்த மசூதியில் தான் எங்கள் தாய் பக்தராக இருந்தார். கடைசி வரை இந்த மசூதியில் தான் பக்தராக இருந்து வந்தார். உறுப்பினர் தொகையை கட்ட அவர் தவறியதே இல்லை” என்றார். 

மேலும் அவர் கூறுகையில், “எங்களுடைய தாய் கடந்த 6 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார். அவருடைய ஒரே விருப்பம் தட்டமாலா மசூதியில் அவரது உடலை அடக்கம் செய்வதுதான். 

பிப்ரவரி 10ம் தேதி கதீஜா இறந்த நிலையில், மறுநாள் அவரது உடலை அடக்கம் செய்ய மசூதியில் மகள்களும், உறவினர்களும் திரண்டுள்ளனர். அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கதீஜா உடலை அங்கு அடக்கம் செய்ய முடியவில்லை. உறுப்பினர் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறி ஜமாத் கமிட்டி உறுப்பினர்கள் தடுத்துவிட்டனர்.

ஆனால், தட்டமாலா மசூதியில் நடப்பதை அறிந்த கிலிகொல்லூரில் உள்ள கிழக்கெகரா மசூதி தங்கள் இடத்தில் கதீஜாவின் உடலை அடக்கம் செய்து கொள்ள அன்று மாலையே ஏற்பாடு செய்து கொடுத்தது. உடலை அடக்கம் செய்த பின்னர், மாநில பெண்கள் நல ஆணையத்திடம் கதீஜாவின் மகள்கள் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இதுகுறித்து முதும் பீவி கூறுகையில், “எங்களுக்கு நடந்தது போல் மற்ற யாருக்கும் நடக்க கூடாது. அதனால் தான் ஆணையத்திடம் சென்று முறையிட்டோம்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com