காதலை ஏற்க மறுத்த நடனப்பெண் மீது ஆசிட் வீசிய கொடூரன்
மத்தியப்பிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்த நடனப்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பேங்காங்கா பகுதியை சேர்ந்தவர் ரூபாலி (20) என்ற பெண். இவர் தேசிய மற்றும் சர்வதேச டிவி நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மோனு. இவர் ரூபாலியின் நடன நிகழ்ச்சிகளை பார்த்து அவருக்கு ரசிகராகியுள்ளார். இதன்பின்னர் ரூபாலியை பின்தொடர ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் ரூபாலியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் ரூபாலி மறுத்துவிட்டார். இந்நிலையில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ரூபாலி அமெரிக்க செல்லவிருந்தார்.
வீட்டிலிருந்த ரூபாலியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மோனு, அமெரிக்கா செல்வதற்கு முன்னர் ஒருமுறை பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அத்துடன் தான் உனது வீட்டிற்கு வெளியே தான் நிற்கிறேன் என்று கூறி ரூபாலியை அழைத்துள்ளார். இறுதியாக பார்க்க வேண்டும் என்று கூறியதால், ரூபாலியும் பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது முகத்தை மறைத்தபடி நின்றுகொண்டிருந்த மோனு, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ரூபாலியின் முகத்தில் ஊற்றிவிட்டு ஓடியுள்ளார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆசிட் வீச்சில் அலறித்துடித்த ரூபாலியை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 25% கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரூபாலி தரப்பிலிருந்து வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மோனுவை காவல்துறையினர் கைது செய்தனர்.