கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வெற்றி பெறுவாரா குமாரசாமி..?
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறது.
கர்நாடகா தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்ததை அடுத்து, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனத் தெரியவந்ததால் அவர் பதவி விலகினார். இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி புதிய முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
குமாரசாமிக்கு ஆதரவாக மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் 36 வாக்குகள், காங்கிரஸின் 78 வாக்குகள், ஒரு சுயேச்சை உறுப்பினரின் வாக்கு என மொத்தம் 115 வாக்குகள் உள்ளன. இதனால் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் அனைவரும் கடந்த 9 நாட்களாக சொகுசு விடுதியில் பலத்த பாதுகாப்புக்கு இடையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின்னரே தங்கள் எம்எல்ஏக்கள் தொகுதிக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சதானந்தா தெரிவித்துள்ளார்.