இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்டம் காட்டும் மழை...14 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!
கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அங்கு பலத்த மழை பெய்து பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லும் காட்சிகளை காண முடிகிறது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகளில் பலத்த மழைப்பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தின் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இமாச்சலின் தரம்சாலா பகுதி, கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதி சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. கேதார்நாத் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டநிலையில், சுமார் 1300 சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழு இறங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி, பூஞ்ச், தோடா பகுதிகளில் நேற்றைய தினம் (26.6.2025) மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இந்தப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தில் 7 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ரஜோரியை சேர்ந்த 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசத்தில், பிச்சோம் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை (24.6.2025) சச்சுங் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருநபர் உயிரிழந்தார். கனமழையைத் தொடர்ந்து பச்சுக் ஆற்றில் மற்றொருவர் அடித்துச் செல்லப்பட்டதாக மாநில அவசர செயல்பாட்டு மையத்தின் (SEOC) அறிக்கை வெளியிட்டுள்ளது . இதன் மூலம், வடகிழக்கு மாநிலத்தில் பருவமழை தொடர்பான பேரழிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது
இப்படி இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை ஆட்டம் காட்டி வருகிறது.