அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 19 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கின்றன.
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்திரா, தன்சிரி, ஜியா பராலி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சாலைகள், பாலங்கள் மற்றும் ஆறுகளின் கரைகள் பெரிதும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 89 பேர் உயிரிழந்துவிட்டதாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.