ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியா முக்கிய சந்தையாக இருக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப் டீல் போன்றவை முக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக உள்ளன. இன்னும் எத்தனையோ சிறு சிறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் அமேசான் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறது. அதிகப்படியான தள்ளுபடி, எளிதான வாடிக்கையாளர்கள் சேவை ஆகியவையே அமேசானின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதனால், வால்மார்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது ஃப்ளிப்கார்ட். இந்நிலையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மிக மோசமான நடத்தை குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக ஃப்ளிப்கார்ட்டின் தாய் நிறுவனமான வால்மார்ட் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு குறித்து பன்சாலிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தன் மீதான புகார்களை உறுதிபட மறுத்துள்ளதாகவும் வால்மார்ட் தெரிவித்துள்ளது.
மேலும் பன்சால் தவறிழைத்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் எனினும் இவ்விவகாரத்தை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பது தமது கடமை என்றும் வால்மார்ட் தெரிவித்துள்ளது