இந்தியாவில் இன்றிலிருந்து 5 நாட்களுக்குள் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பிலான ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனையாகும் எனத் தெரியவந்துள்ளது.
'பண்டிகைகள் வரும் பின்னே. ஆன்லைன் ஷாப்பிங் தள்ளுபடிகள் வரும் முன்னே' என்பது நவீன காலத்து புதுமொழியாகிவிட்டது. நவராத்திரி, தீபாவளி என பண்டிகைகள் அணிவகுக்கும் நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் அதிரடி தள்ளுபடி விற்பனையும் தற்போது தொடங்கியுள்ளது.
குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 62% வரை தள்ளுபடி வழங்கி வாடிக்கையாளர்களுக்கு வலை வீசுகின்றன ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் அறிவித்துள்ள 5 நாட்கள் சிறப்பு விற்பனையில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் விற்கப்படும் என கவுன்டர்பாயின்ட் என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் BLACK FRIDAY என்ற பெயரில் கடந்தாண்டு குறிப்பிட்ட நாளில் நடந்த உலக சாதனை விற்பனையை இந்தாண்டு இந்தியாவில் பண்டிகைக்கால ஆன்லைன் சிறப்பு விற்பனை முறியடிக்கும் என கணித்துள்ளது கவுன்டர் பாயின்ட் நிறுவனம். ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்கப்படும் பொருட்களை நுகர்வோருக்கு தங்குதடையின்றி வினியோகிக்க அமேசான் நிறுவனம் 50 ஆயிரம் பேரையும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 30 ஆயிரம் பேரையும் கூடுதலாக நியமித்துள்ளன. பண்டிகை என்றாலே பொதுவாக உற்சாகம்தான். ஆன்லைன் ஷாப்பிங்கில் மலிவு விலை விற்பனை பண்டிகைக்கால உற்சாகத்தை கூட்டியுள்ளது என்றால் அது மிகையல்ல.