வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - களத்தில் குதித்த கேரள மீனவர்கள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - களத்தில் குதித்த கேரள மீனவர்கள்
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - களத்தில் குதித்த கேரள மீனவர்கள்

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நீடிக்கும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு நிலவி வருகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா, வாளையார் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலக்காடு - மலம்புழா பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் அம்மாநில மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய மீட்புக் குழுவினர் மற்றும் போலீசாருடன் இணைந்து மீனவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மீட்புப் பணிகள் குறித்து மீனவர் ஜாக் மண்டேலா கூறுகையில், “எங்களால் குறுகிய வழியில் கூட செல்ல முடியும். எங்கள் படகில் இரண்டு பேர் இருப்பார்கள். அவர்களுடன் இஞ்சின் டிரைவர், வழிகாட்டி, உதவியாளர் இருப்பார்கள். அவர்களோடு சேர்த்து மேலும் 10 பேரை படகில் ஏற்று பாதுகாப்பாக கொண்டு வர முடியும். 50 செ.மீக்கு மேல் தண்ணீரின் ஆழம் இருந்தாலே படகு செல்வது ஏதுவாக இருக்கும்” என்றார். 

கப்பற்படை படகுகள் போதுமான அளவிற்கு இல்லாத காரணத்தினால்தான் நாட்டுப் படகுகளை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடற்கரையை ஒட்டிய நீண்டகரா, பொன்னனை, தனூர், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com