நிர்வாணமாக ஓடுமாறு டார்ச்சர் - 120 நிமிடங்கள் தொடர்ச்சியாக ராகிங்; முதலாமாண்டு மாணவர் பரிதாப மரணம்!

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமையால் முதலாமாண்டு மாணவர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Swapnadip Kundu
Swapnadip KunduTwitter

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஸ்வப்னோதீப் குண்டு (வயது 18) என்ற மாணவர் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி இரவு விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

விடுதியில் நடந்த ராகிங் கொடுமையால்தான் இந்த விபரீத முடிவை ஸ்வப்னோதீப் குண்டு எடுத்ததாக அவரது உறவினர்களும், சக மாணவர்களும் குற்றஞ்சாட்டினர். தற்கொலை செய்து கொள்வதற்கு சிலமணி நேரத்திற்கு தனது தாயாரிடம் போன் செய்து தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்றும் மூத்த மாணவர்கள் ராக்கிங் செய்து டார்ச்சர் அளிப்பதால் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறி அழுதுள்ளார்.

Jadavpur University Hostel
Jadavpur University Hostel

இதனிடையே ஸ்வப்னோதீப் குண்டு மரணம் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகிங் செய்ததாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்வப்னோதீப்பை தூங்க விடாமல் ராக்கிங் செய்து டார்ச்சர் அளித்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராகிங் செய்ததாகவும் இதனால் ஸ்வப்னோதீப் கடும் அதிர்ச்சியில் இருந்ததாகவும் சக மாணவர்கள் கூறினர். மேலும் புதன்கிழமை மாலை ஸ்வப்னோதீப்பை விடுதியின் மொட்டை மாடியில் ஆடையின்றி நிர்வாணமாக ஓட கட்டாயப்படுத்தியதாக சில மாணவர்கள் தெரிவித்தனர். இந்த ராகிங் தொடர்பாக சில மாணவர்கள் பல்கலைக்கழக டீன் ரஜத் ரேயிடம் இரவு 10 மணியளவில் போன் மூலமாக தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் அவர் காலையில் பேசும்படி அலட்சியத்துடன் கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் அமிதவ தத்தா கூறுகையில், ''மாணவர் உயிரிழப்பு வருத்தமளிக்கிறது. தற்போதைய நிலையில், ராகிங் தொடர்பாக முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், கமிட்டி இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்கும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com