23 கோடி இந்தியர்களின் தினசரி வருமானத்தை சாய்த்த கொரோனா முதல் அலை! -புதிய ஆய்வு சொல்வதென்ன?

23 கோடி இந்தியர்களின் தினசரி வருமானத்தை சாய்த்த கொரோனா முதல் அலை! -புதிய ஆய்வு சொல்வதென்ன?
23 கோடி இந்தியர்களின் தினசரி வருமானத்தை சாய்த்த கொரோனா முதல் அலை! -புதிய ஆய்வு சொல்வதென்ன?

கொரோனா முதல் அலையின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள அறிக்கையில் மக்கள் வருமானம் குறித்து பேசப்பட்டுள்ளது. அதுகுறித்து சற்று விரிவாக பார்ப்போம்!

கொரோனா முதல் அலையில் தாக்கம் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முன்பாகவே இரண்டாம் அலை ஆரம்பித்துவிட்டது. முதல் அலையை விட இரண்டாம் அலை மக்களை தவிக்க வைத்துக்கொண்டிருக்க, நேற்று வெளியான அறிக்கை ஒன்றில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள், முதல் அலையில் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட “ஸ்டேட் ஆஃப் வொர்க்கிங் இந்தியா 2021: கொரோனாவின் ஒரு ஆண்டு” என்ற அறிக்கை தான்.

இதில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலை 23 கோடி இந்தியர்களின் குடும்பங்களின் வருவாயை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியமான ரூ.375க்கும் குறைவாக ஆக்கியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், `தினசரி வருமானம் ரூ. 375 க்கு குறைவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை முறையே 22.62 கோடி. இதுவே, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 7.24 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு தொற்றுநோய் ஆரம்பித்த காலகட்டமான மார்ச் தொடக்கத்தில் கணக்கிடப்பட்டவை. கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், அதாவது தொற்று நோய் ஆரம்பித்து எட்டு மாதங்கள் கழித்து இந்த எண்ணிக்கை கிராமப்புறங்களில் 36.52 கோடியாகவும் (61 சதவீதம் உயர்ந்து), நகர்ப்புறங்களில் 16.38 கோடியாகவும் (126 சதவீதம் உயர்ந்துள்ளது) அதிகரித்துள்ளது. மொத்தத்தில், இந்த எண்ணிக்கை 22.62 கோடியிலிருந்து 52.9 கோடியாக உயர்ந்தது, இது 77 சதவீதம் உயர்ந்துள்ளது.

தொற்றுநோய்க்கு முன்னர், அத்தகைய மக்களின் விகிதம் முறையே கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 25.4 சதவீதம் மற்றும் 15.6 சதவீதம் ஆகும். அக்டோபர் 2020க்குள், விகிதாச்சாரம் 41 சதவீதமாகவும் (கிராமப்புறம்), 35.3 சதவீதமாகவும் (நகர்ப்புறம்) உயர்ந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், ``தொற்றுநோய் ஏற்படவில்லை என்றால், 2019 மற்றும் 2020 க்கு இடையில் கிராமப்புறங்களில் 5 சதவீத புள்ளிகளாலும், நகர்ப்புறங்களில் 1.5 சதவீத புள்ளிகளாலும் வறுமை குறைந்திருக்கும்.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குள் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், சுய வேலைவாய்ப்பு (30 சதவீதம்), சாதாரண ஊதிய தொழிலாளர்கள் (10 சதவீதம்) மற்றும் முறைசாரா சம்பள வேலை (9 சதவீதம்) போன்ற முறைசாரா வேலைக்குச் சென்றனர். முக்கியமாக இது லாக் டவுன் சமயங்களில் அதிகரித்தது. தங்களை ஏழைகள் என்று நினைக்காத பல வீடுகள் உண்மையில் ஏழைகளாகிவிட்டன" என்று பேராசிரியரும் அறிக்கையை தயார் செய்த குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்களில் ஒருவருமான அமித் பாசோல் கூறி இருக்கிறார்.

இவர் தொடர்ந்து பேசுகையில், ``தற்போது, பல்வேறு மாநிலங்கள் தங்களது சொந்த குறைந்தபட்ச ஊதியங்களைக் கொண்டுள்ளன, பெரும்பாலும் ரூ.150 முதல் ரூ.300 வரை உள்ளன. மத்திய சட்ட அமைச்சகம் 2019 ஆம் ஆண்டில் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான ஒரு வழிமுறையைத் தீர்மானிக்க அனூப் சத்பதி குழுவை நியமித்தது. இந்தக் குழு தேசிய குறைந்தபட்ச ஊதியமாக, 375 ரூபாயை முன்மொழிந்தது.

இந்த ஊதியம், குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளல் மற்றும் ஆடை, எரிபொருள் மற்றும் வீட்டு வாடகை, கல்வி, மருத்துவ சிகிச்சை, பாதணிகள் மற்றும் ஊதியம் பெறுபவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருப்பவர்களுக்கும் போக்குவரத்து போன்ற மதிப்பிடப்பட்ட செலவினங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பார்க்கையில் கொரோனா முதல் அலை நிர்ணயிக்கப்பட்ட இந்த ஊதியத்தை வெகுவாக குறைத்தது என்பது இந்த அத்தியாவசியங்களையும் மக்கள் பெற முடியாத வகையில் ஆக்கியிருக்கிறது என்பதற்கு சமம்" என்றார் .

இதே அறிக்கை, கொரோனா தாக்கியபோது இந்திய பொருளாதாரம் ஏற்கனவே நீண்டகால மந்தநிலையில் இருந்தது என்று கூறுகிறது. கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் போடப்பட்ட நாடு தழுவிய லாக் டவுனின் போது சுமார் 10 கோடி வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. அதேநேரம் 2020 ஆம் ஆண்டின் இறுதியில், சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர். மற்றவர்களின் வருமானம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சராசரி குடும்பத்திற்கு, கடந்த ஆண்டு அக்டோபரில் மாத தனிநபர் வருமானம் ரூ .14,979 ஆக இருந்தது.

வேலை மற்றும் வருமான இழப்புகளின் விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொழிலாளர் பங்கு 2019-20 இரண்டாம் காலாண்டிற்கும் (32.5 சதவீதம்) மற்றும் 2020-21 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் (27 சதவீதம்) இடையே 5 சதவீதமாக குறைந்தது" என்ற புள்ளி விவரங்களை அடுக்கிய இதே அறிக்கை, இதனை சமாளிக்க, ``2021 ஆம் ஆண்டின் இறுதி வரை பொது விநியோக முறையின் கீழ் இலவச ரேஷன்களை விரிவுபடுத்தவும், பாதிக்கப்படக்கூடிய வீடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ .5,000 ரொக்கப் பரிமாற்றம் செய்ய வேண்டும். கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணி உரிமை ஆண்டுக்கு 100 முதல் 150 நாட்கள் வரை விரிவாக்கப்பட வேண்டும். மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒரு பைலட் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்" என்பது போன்ற சில பரிந்துரைகளை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com